இந்தியாவை விளையாட்டு என்கிற பேரில் கூறு போட ஆரம்பித்து விட்டார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட எண்ணம், பிடித்த, பிடிக்காத விளையாட்டு வீரர்கள் இருப்பார்கள். அது அவரவர் தனிப்பட்ட விசயம். இதில் அடுத்தவன் தலையிடுவது தவறு. இதில் உள்ள நண்பர் குறிப்பிட்ட ஒரு அணியின் சீருடையை எரிக்கிறார். அது தவறு. ஒத்துக் கொள்வோம். அந்த நண்பர் அந்த அணியின் மீதான தனது எதிர்ப்பை, இவ்வாறு காட்டியிருக்கலாகாது. அதற்காக அவரை நாடு கடத்த ஒரு படையே கிளம்பி அவரைத் துரத்த ஆரம்பித்தால் என்னாகும்?

“கிரிக்கெட் ஒரு மதம் என்றால், சச்சின் டெண்டுல்கர்தான் அதன் கடவுள்” என்று அயல்நாட்டு கிரிக்கெட்காரர் ஒருவர் கூறியதில், நம் மக்கள் கிரிக்கெட்டையும் விட்டு விட்டார்கள் சச்சின் டெண்டுல்கரையும் விட்டு விட்டார்கள். மதத்தை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள். மதம் என்று வந்து விட்டாலே சர்ச்சைகள் சகஜமாகிவிடும். விளைவுகள் பரிதாபமாகி விடும்.
அந்த அணிக்கு ஆதரவு காட்டுவதானால் இங்கே இரு. இல்லையானால் தமிழ்நாட்டை விட்டு காலி பண்ணு என்கிற அடிப்படையில் அந்த நண்பரை கடித்துக் குதற கிளம்பியுள்ளது ஒரு கூட்டம். அத்தனைக்கும் அந்த அணியின் தலைவரே இந்த மாநிலத்துக்காரர் இல்லை. மத்த அணி வீரர்களும் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஒரு சிலர்தான். அது ஏன் ரசிகர்களுக்கு புரிவதில்லை?
கிரிக்கெட்டின் திரை மறைவு பேரங்களும், சூதாட்டங்களும், இதைப் போல வெறியர்களுக்கு புரிவதில்லை. ரசிகன் என்பவன் குறிப்பிட்ட நபரையோ, அணியையோ மட்டும் ஆதரிப்பவன். அதைப் போல தனக்கு பிடித்த நபரின் அல்லது அணியின் எதிரி அல்லது எதிரணியை சாடுபவர்களை வெறியர்கள் என்று சொல்லாமல் என்னென்று சொல்வது.
இந்த விளையாட்டை பிழைப்பை கெடுத்துக் கொண்டும், படிப்பை கெடுத்துக் கொண்டும் தொலைக்காட்சியில் பார்ப்பது நன்மையானதோ, பெருமையானதோ அல்ல. விளையாடுபவனுக்கு, உடல் வலிமை பெருகும், நிறைய விளம்பரம் கிடைக்கும், அவன் வங்கி இருப்பு உயரும். அவன் தலைமுறைக்கும் ஓஹோவென்றிருப்பான்.
அதை வெறுமனே வேடிக்கை பார்ப்பவன் என்ன ஆவான்?





